தமிழக செய்திகள்

கர்நாடகாவில் 2 ஆண்டுகளாக முகமூடி அணிந்து ரூ.3 கோடி தங்கம் திருடிய வாணியம்பாடி வாலிபர்

விசாரணையில் கோலார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகளை திருடியுள்ளார்

நகைக்கடை உரிமையாளர்கள் தரப்பில் சுமார் 200 கிராம் தங்க நகைகள் கோலார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் வாணியம்பாடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முகமூடி அணிந்து பூட்டியிருக்கும் வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களை குறிவைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.

இதையடுத்து கோலார் மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து, கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர் .

அதன் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

வாணியம்பாடி

விசாரணையில் கோலார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகளை திருடியுள்ளார்.

கொள்ளையடித்த நகைகளை வாணியம்பாடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து முனிராஜை அழைத்துக் கொண்டு வாணியம்பாடி வந்த கோலார் போலீசார், அவர் நகைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் கடைகளுக்குச் சென்று நகைகளை ஒப்படைக்குமாறு உரிமையாளர்களிடம் கேட்டுள்ளனர்.

நகைக்கடை உரிமையாளர்கள்

இதனை அறிந்த நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, உள்ளூர் போலீசாரின் அனுமதி இல்லாமல் வெளிமாநில போலீசார் நேரடியாக கடைகளுக்குள் சென்று நகைகளை கேட்பதாக புகார் தெரிவித்தனர்.

போலீசார்

இதையடுத்து வாணியம்பாடி மற்றும் கோலார் மாவட்ட போலீசார் நகைக்கடை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முனிராஜ் விற்பனை செய்ததாக கூறப்படும் நகைகளை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பின்னர் நகைக்கடை உரிமையாளர்கள் தரப்பில் சுமார் 200 கிராம் தங்க நகைகள் கோலார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் வாணியம்பாடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT