திருச்சியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி மருது பாண்டியர்கள் செய்த ஜம்புத்தீவு பிரகடனம் வீரத்தின் உரைகல்! என்று தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
மாமன்னர் மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.
பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
மருது பாண்டியர்களை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை. காளையார் கோவிலை தகர்ப்பேன், நாட்டு மக்களை கொல்வது என ஆங்கிலேயர்கள் எடுத்த தகவலால் சரணடைந்த மருது பாண்டியர்கள், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
இந்நிலையில், மருது பாண்டியர்களின் நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"மருதுபாண்டிய மாமன்னர்கள்"
"போர்முனையில் சந்திக்க திராணியற்ற பரங்கியர் கூட்டம் சூழ்ச்சியால் மருதுபாண்டியர்களை கைது செய்தது. சரணடையா விட்டால் காளையார் கோவில் கோபுரம் தகர்க்கப்படும் என அறிவித்து, பீரங்கிகளை நிறுத்த, காளீஸ்வரர்மேல் கொண்ட பக்தியால் சரணடைய, மருதிருவரை 1801ம் ஆண்டு அக்டோபர் 24ம் நாள் திருப்புத்தூரிலே கூண்டிலே அடைத்து தூக்கிலிட்டது. அவர்களுடன் ஐயாயிரம் பேர் வரை கொல்லப்பட, ஐநூறு பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது. திருச்சியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி அவர்கள் செய்த ஜம்புத்தீவு பிரகடனம் வீரத்தின் உரைகல்!
சிவகங்கைச்சீமையை ஆண்ட மருதிருவரின் ஆளுமையும் ஆண்மையும் வீரமும் துணிவும் என்றும் நினைவுகூரப்படும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.