வீரம், துணிச்சல், தியாகம் உள்ளிட்டவற்றுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த மருது சகோதரர்கள் தேசப்பற்றுக்கு முன்னுதாரணம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகையே நடுங்க வைத்த ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டியடித்த வீரத்தின் விளைநிலம் மருது சகோதரர்கள், சதியால் வீழ்த்தப்பட்டு தூக்கிலிடப்பட்டதன் 225-ஆம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நான் போற்றி வணங்குகிறேன். தாய்நாட்டைக் காப்பதற்காக எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்த மருது பாண்டியர்களின் வரலாறு இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் 1785 முதல் 1801 வரை நம் மண்ணை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கி வீறுகொண்டு போராடினார்கள். பீரங்கி போன்ற அதிநவீன ஆயுதங்களுடன் போரிட வந்த வெள்ளையர்களை வேல்கம்பும், வீச்சரிவாளும் வைத்து ஓடஓட விரட்டிய பெருமை கொண்டவர்கள் மருது சகோதரர்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801ம் ஆண்டு சிவகங்கை மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். சதித்திட்டங்கள் மூலம் சிவகங்கையை சுற்றி வளைத்த ஆங்கிலேயர்களிடம் இருந்து அவர்கள் தப்பிவிடுகின்றனர். மருது சகோதரர்களை பிடிக்க முடியாததால் ஆத்திரத்தில் காளையார் கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என்று ஆங்கிலேய படைகள் அறிவித்தன. ஆசை, ஆசையாக கட்டிய கோபுரம் இடிக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால் இறுதியாக ஆங்கிலேய படைகளிடம் மருது சகோதரர்கள் சரணடைந்தனர். அதன்பின்னர் அவர்களை திருப்பத்தூரில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். 1801-ஆம் ஆண்டில் மருது பாண்டியர்கள் நடத்தியது தான் வெள்ளையர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போர் ஆகும்.
மருது சகோதரர்கள் நினைத்திருந்தால், ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைத்து அரச வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்; ஆனாலும் அது அடிமை வாழ்க்கை தான் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆங்கிலேயர்கள் பிடியிலிருந்து தப்பிய நிலையில் அவர்கள் வேறு நாடுகளுக்கு சென்றிருக்கலாம். ஆனால், தங்களின் நாடு வெள்ளையர்களின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக இறுதி வரை போராடினார்கள்; தாங்கள் தப்பிச் சென்றால் காளையார் கோவில் கோபுரத்தை வெள்ளையர்கள் இடித்து தள்ளிவிடுவார்கள் என்பதால், அதைக் காப்பதற்காக சரணடைந்து உயிரை ஈந்தனர். இது தான் தியாகத்திற்கான சான்று ஆகும்.
வீரம், துணிச்சல், தியாகம் உள்ளிட்டவற்றுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த மருது சகோதரர்கள் தேசப்பற்றுக்கு முன்னுதாரணம் ஆவர். அவர்களின் வீரத்தையும், தீரத்தையும், தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூர்வோம்; மண்ணைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.