தமிழக செய்திகள்

தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த 100-வது நாளை இனிப்பு வழங்கி வேதனையை பகிர்ந்த மக்கள்

வனத்துறையினரின் செயலை கண்டித்து இந்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அடுத்தடுத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மற்றொரு கிராமத்தில் 100-வது நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியத்தில் பாலூத்து, தேவராஜ்நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பட்டாளம்மன் கோவிலில் இருந்து வெள்ளப்பாறை வரை மெட்டல் சாலை பணி நடைபெற்று வந்த நிலையில் வனத்துறைக்கு கட்டுப்பட்டது என கூறி பணிகளை தடுத்து நிறுத்தி விட்டனர்.

எனவே இதனை கண்டித்து பாலூத்து கிராமம் பாகம் எண் 177, 178, 179 ஆகிய வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக போஸ்டர் ஒட்டினர்.

இதே போல் தேவராஜ்நகர் கிராமத்தில் சீதாலகாளியம்மன் கோவில், விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் கடந்த 41 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்த நிலையில் பராமரிப்பு, அன்னதானக்கூடம் அமைக்கும் பணிகளை தொடங்கிய போது வனத்துறையினர் தங்கள் எல்லைக்கு உட்பட்டது என கூறி பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

எனவே வனத்துறையினரின் செயலை கண்டித்து இந்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் 3 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வனத்துறையினர் கடும் நெருக்கடியை கொடுத்து வருவதால் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர். இதே போல் கடமலைக்குண்டு-கண்டமனூர் சாலையில் கொம்புக்காரன் புலியூர் வாகன சோதனை சாவடி அருகே கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை புறக்கணிக்கப்போவதாக போராட்டம் நடத்தினர்.

கடமலைக்குண்டு ஒன்றியம் செங்குளம்-நரியூத்து இடையே தார் சாலை அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் தடை விதித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. எனவே நரியூத்து கிராம மக்கள் தங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும். சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் எல்லையில் அறிவிப்பு பலகை வைத்தனர். அறிவிப்பு பலகை வைத்து 100 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உணர்த்தும் வகையில் அறிவிப்பு பலகைக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கி தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.