ஒரு அரசியல் கட்சி தாமாக முன்வந்து இதுபோன்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவதை அரசு ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, அதற்குத் தடை சொல்வது ஏற்புடையதல்ல என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிட ஆக்கிரமிப்புகளாலும், கொட்டப்படும் பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளாலும் ஆற்றின் அகலமும் நீர் செல்லும் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை ஆவணங்களின் அடிப்படையில் கூட்டு சர்வே நடத்தி எல்லைகளை வரையறுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மணிமுத்தாறு ஆற்றுப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடத் தயார் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான அனுமதி கோரிய கோரிக்கை மீண்டும் பரிசீலனைக்கு வந்தபோது, ஒரு அரசியல் கட்சி தாமாக முன்வந்து இதுபோன்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவதை அரசு ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, அதற்குத் தடை சொல்வது ஏற்புடையதல்ல என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக முன்னெடுத்துள்ள இந்தச் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கவை என்றும், இதனைத் தாங்கள் முழுமையாக வரவேற்பதாகவும் நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.