தமிழக செய்திகள்

முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்தாதீர்கள்..!- மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

இன்று தீபம் ஏற்றாதவா்கள், நாளை பக்தா்கள் கோயிலுக்குள் செல்வதை தடுப்பாா்கள்..

சென்னையில் நேற்று அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதைத் தவெக அரசால் தடுக்க முடியும். ஆனால் தமிழக மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது. இதனால், கோடிக்கணக்கான பக்தா்களின் மனதை தமிழக அரசு புண்படுத்தியுள்ளது. இன்று தீபம் ஏற்றாதவா்கள், நாளை பக்தா்கள் கோயிலுக்குள் செல்வதை தடுப்பாா்கள்.

உலகத்தரத்தில் மதுரை ரெயில் நிலைய சந்திப்பு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரெயில் நிலைய உச்சியில் தீபம் ஏற்றப்படும். அதனால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்த போவதில்லை" என்றார்.

இதற்கு பல தரப்பு கட்சிகளும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பேச்சுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதோடு, 300 ஆண்டுகளாகப் பக்தியுடன் ஏற்றப்பட்டு வரும் திருக்கார்த்திகை தீபத்தையும் இடம் மாற்ற முயற்சி செய்தார்கள்.

இப்போது, மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "ரயில்வே ஸ்டேஷன் மீது தீபம் ஏற்றுவோம்" என்று பக்தர்களின் நம்பிக்கையைக் கேலி செய்யும் விதமாகப் பேசுகிறார். அதைப் பலரும் கைதட்டி ரசிப்பது வேதனையளிக்கிறது.

தங்களின் அரசியலுக்காகத் தொடர்ந்து உண்மையான முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்தி வரும் பாஜகவினரையும், மத்திய அமைச்சரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நீங்கள் கேலி பேசுவதும், விளையாடுவதும் எங்கள் இறைவன் முருகனிடம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT