மத நல்லிணக்கம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை பாதுகாக்க உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். சட்டத்தின் ஆட்சியையும், மாநில அரசின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கமிட்டியின் உறுதியான நிலைப்பாடாகும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
மத நம்பிக்கைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் மதித்துப் போற்றுவதோடு, பல்வேறு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதியான சமூகச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் தலையாய பொறுப்பாகும்.
இத்தகைய சூழலில், கோவில் நிர்வாகம் தொடர்பாக நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்திருப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய துணை ராணுவப் படைகளின் பங்களிப்பு ஆகியவை நீதித்துறை, மாநில நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அதிகார வரம்புகள் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. உணர்வுப்பூர்வமான இதுபோன்ற விவகாரங்களில், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகப் பொறுப்புகளும், இந்திய அரசியல் சாசனம் வகுத்துக்கொடுத்துள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவானது எந்த ஒரு தரப்பினரின் மத உணர்வுகளையும் பாதிக்காத வண்ணம், அனைத்துத் தரப்பினரிடையேயும் நம்பிக்கையையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டியது அவசியமாகும். நாட்டில் சட்டத்தின் ஆட்சியும் நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் தமிழ்நாட்டின் அமைதியும், மத நல்லிணக்கமும், அரசியல் சாசன விழுமியங்களும் எவ்விதப் பாதிப்புமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுதியான நிலைப்பாடாகும்.
எனவே, இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளர்.