எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-26 இல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் RTE திட்டத்திற்கு ரூ.714 கோடியை மட்டும் பெயரளவுக்கு விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்துப் பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது.
மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன.
மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, பி.எம்.ஸ்ரீ. மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா? இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.