மாணிக்கம் தாகூர் 
தமிழக செய்திகள்

கருத்துச் சுதந்திரம் முதல் நீதித்துறை வரை முடக்கம்: வி-டெம் அறிக்கையைச் சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் ஆவேசம்!

வி-டெம் அறிக்கையின்படி, தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 179 நாடுகளில் 106- வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஸ்வீடனின் கோத்தன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆய்வு நிறுவனமான ‘வி-டெம்’ (V-Dem Institute) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜனநாயக அறிக்கையில், இந்தியாவில் மக்களாட்சி நெறிமுறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதை அம்பலப்படுத்தியுள்ளது; பா.ஜ.க. அரசின் இந்த ஜனநாயக விரோத, அடக்குமுறைப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிக வன்மையாகக் கண்டிக்கிறது!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்ணல் அம்பேத்கரும், பண்டித ஜவஹர்லால் நேருவும் தொலைநோக்குப் பார்வையோடு கட்டமைத்த இந்திய ஜனநாயகத்தை, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் திட்டமிட்டுச் சிதைத்து, இன்று சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு ‘தேர்தல் சர்வாதிகார நாடாக’ சீரழிய வைத்து தலைகுனியச் செய்துள்ளது.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாடு ஒழிப்புக்கான குழுவும் (UN CERD) வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவது குறித்தும், சட்ட அமலாக்க அமைப்புகளின் முறைகேடுகள் குறித்தும் சுட்டிக்காட்டி கடும் கவலையைத் தெரிவித்துள்ளது.

வி-டெம் அறிக்கையின்படி, தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 179 நாடுகளில் 106- வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. சுதந்திர ஜனநாயகக் குறியீட்டில் 105-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. 2009-ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஜனநாயகத்தை நோக்கித் தொடங்கிய சரிவு, மோடி ஆட்சிக் காலத்தில் உச்சகட்ட சர்வாதிகாரமாக உருவெடுத்து, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வரலாற்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக இந்த அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

வி-டெம் அறிக்கையில் அம்பலமாகியுள்ள பா.ஜ.க. அரசின் முக்கிய ஜனநாயகப் படுகொலைகள் :

1. கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரப் படுகொலை

ஆளும் பா.ஜ.க. அரசின் தவறுகளையும் தோல்விகளையும் சுட்டிக்காட்டும் சுயேச்சையான பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் தணிக்கைகளும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உலகளவில் பத்திரிகைத் தணிக்கை மற்றும் ஊடக ஒருதலைப்பட்சப் போக்கு மோசமடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.

2. கல்வி மற்றும் கருத்துப் பரிமாற்றச் சுதந்திரம் முடக்கம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வகங்களின் தன்னாட்சி சிதைக்கப்பட்டு, கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் சுதந்திரமான ஆய்வு மற்றும் கருத்துப் பகிர்வுக்கான உரிமை திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. சர்வதேச அளவில் கல்வி மற்றும் கலாச்சார வெளிப்பாட்டுச் சுதந்திரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள 41 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

3. அரசியலமைப்பு நிறுவனங்களின் தன்னாட்சி பறிப்பு

மக்களாட்சியின் தூண்களாக விளங்கும் தேர்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட சுதந்திரமான தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் ஆளும் கட்சியின் அரசியல் பழிவாங்கும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தன்னாட்சி உலகளவில் வீழ்ச்சியடைந்துள்ள 28 நாடுகளில் இந்தியாவும் தீவிரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

4. நீதித்துறை சுதந்திரம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் முடக்கம்

நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்ப்புகளைப் புறந்தள்ளுவதுடன், மக்கள் பிரச்சினைகளைப் பேசும் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பும் விவாதங்களும் திட்டமிட்டு முடக்கப்பட்டு வருகின்றன. அரசின் அத்துமீறல்களை நாடாளுமன்றம் விசாரித்துத் தட்டிக்கேட்கும் அதிகாரம் வீழ்ச்சியடைந்துள்ள 20 முன்னணி நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

5. தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகள் மீதான ஒடுக்குமுறை

சமூக நீதிக்காகவும், சாமானிய மக்களின் உரிமைகளுக்காகவும் களத்தில் நிற்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளின் குரல்வளை நெரிக்கப்பட்டு முடக்கப்படுகிறது. மக்கள் உரிமை அமைப்புகளை ஒடுக்குதல் மற்றும் அவற்றின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ள நாடுகளில் இந்தியா முக்கியக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது.

6. தேர்தல் சர்வாதிகாரப் போக்கு

பெயரளவில் தேர்தல்களை நடத்திக் கொண்டு, மறுபுறம் உண்மையான கருத்துச் சுதந்திரம், அமைப்புகள் கூடும் உரிமை, குடிமை உரிமைகள் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் ஆகியவற்றை அடியோடு வேரறுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்தியா ‘தேர்தல் சர்வாதிகார நாடாகவே’ வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2008 முதல் தாராளவாத ஜனநாயகக் குறியீட்டில் (LDI) -0.309 புள்ளிகள் வரை சரிந்து, உலகளவில் அதிக மக்களாட்சிச் சரிவைச் சந்தித்த டாப்-3 நாடுகளில் ஒன்றாக இந்தியா பதிவாகியுள்ளது.

‘இந்தியா ஜனநாயகத்தின் தாய்’ என்று உலக நாடுகளின் மத்தியில் வெற்று முழக்கமிடும் பிரதமர் நரேந்திர மோடி, உலக அரங்கில் நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அவப்பெயருக்கும் தலைகுனிவிற்கும் என்ன பதில் சொல்லப் போகிறார்?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் மக்களாட்சி மாண்புகளையும் காக்க தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கம் சமரசமின்றி களத்தில் நின்று போராடும்! சர்வாதிகார மோடி அரசின் அதிகாரக் குவிப்புக்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்! என்று கூறியுள்ளார்.