தமிழக செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 10 நாட்களில் மாம்பழ சீசன் தொடங்கும்| Mango

சேலம் மார்க்கெட்டுகளுக்கு தற்போது கிளி மூக்கு மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது.

மாலை மலர்

சேலம்:

சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடைய மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வலசையூர், குப்பனூர், வாழப்பாடி, ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது.

இது தவிர தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளையும் மாம்பழங்களும் சேலம் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பழங்கள் சேலம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சேலத்திலும் தெரு தெருவாக வைத்து விற்பனை செய்யப்படும்.

இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு தற்போது கிளி மூக்கு மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது ஒரு கிலோ மாங்காய் 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மாமரங்களில் மாங்காய்கள் தற்போது விளைச்சல் அடைந்துள்ளது. ஒரு சில ரகங்கள் மட்டும் கடைக்கு வர தொடங்கி உள்ளது. வரும் 10 நாட்களில் மாம்பழ வரத்து கணிசமாக அதிகரித்து சீசன் தொடங்கும். அப்போது சேலம்-பெங்களூரா, அல்போன்சா, இமாம்பசந்த், மல்கோவா, உள்பட பல்வேறு ரக மாம்பழங்களும் விற்பனைக்கு அதிக அளவில் வரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.