தமிழக செய்திகள்

சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது- அடுத்த வாரம் முதல் வரத்து அதிகரிக்கும்

இன்னும் 15 நாட்களில் மாம்பழ வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கடை வீதிகளில் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்படும்.

சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடைய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வலசையூர், குப்பனூர், வாழப்பாடி, ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளையும் மாம்பழங்களும் சேலம் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த பழங்கள் சேலம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சேலத்திலும் தெரு தெருவாக தள்ளுவண்டிகள் மற்றும் மளிகை கடைகளிலும் வைத்து விற்பனை செய்யப்படும். குறிப்பாக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மாம்பழ சீசன் தொடங்கி 3 மாதங்களுக்கு சீசன் நீடிக்கும்.

இந்த நிலையில் சேலத்தில் மாம்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் சேலம் கடை வீதியில் உள்ள மாம்பழ கடைகளுக்கு மாம்பழங்கள் வரத்து தொடங்கி உள்ளது. மாம்பழக்கடைகள் மற்றும் குடோன்கள், பழக்கடைகளில் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் சேலம் -பெங்களூரா, பங்கனப்பள்ளி, செந்தூரா, அல்போன்சா ஆகிய மாம்பழங்கள் அதிக அளவில் தற்போது வர தொடங்கி உள்ளது. இந்த மாம்பழங்களை பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

இன்னும் 15 நாட்களில் மாம்பழ வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கடை வீதிகளில் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்படும். மேலும் உள்ளூர் வியாபாரம் போக மாம்பழங்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். நடப்பாண்டில் மாம்பழங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்தாண்டு விளைச்சல் அதிகரித்த நிலையில் விலை மிகவும் குறைந்தது. நடப்பாண்டில் உற்பத்தியை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட உள்ளது. தற்போது செலம்-பெங்களூரா ஒரு கிலோ 150 முதல் 250 ரூபாய்க்கும், பங்கனப்பள்ளி 100 முதல் 150, செந்தூரா 50 முதல் 100, அல்போன்சா 100 முதல் 200 வரைக்கும் விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளது.