சந்தேகப்பார்வையில் இருந்த முஜைதீன் அடிக்கடி மனைவி சோபியாவிடம் வாக்குவாதம் செய்தார். அவர் செல்போனில் பேசும்போதெல்லாம் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு அடித்து, உதைத்து வந்துள்ளார்.
மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முஜைதீன். அதே பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோபியா (வயது26). இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சோபியா செல்போனில் அடிக்கடி பேசுவதை முைஜதீன் சந்தேகப்பட்டு கண்டித்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் இதேபோல் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முஜைதீன் கத்தியால் மனைவி சோபியாவை குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முஜைதீனை கைது செய்தனர். மனைவி மீது சந்தேகப்பட்டு, அவரை கொன்று விட்டதாக முஜைதீன் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. முஜைதீன், மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மது அருந்த வேண்டாம் என்று மனைவி எடுத்துக் கூறியும், அவர் கேட்காமல், வேலைக்கும் ஒழுங்காக செல்லாமல் இருந்து உள்ளார். இதனால் முஜைதீனை குடும்பத்தினர் சிகிச்சைக்காக போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அதன் பிறகு சில நாட்கள் மட்டும் மதுகுடிக்காமல் இருந்த முஜைதீன், மீண்டும் மதுபோதைக்கு அடிமையாகி, ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்தை காப்பாற்ற எண்ணிய சோபியா, அதே பகுதியில் உள்ள துணிக்கடையில் ஊழியராக பணிக்குச் சேர்ந்தார். தினமும் காலையில் பணிக்குச் செல்லும் போது, அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர் ஒருவருடன் சோபியாவிற்கு பழக்கம் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த முஜைதீன் மனைவியை கண்டித்தார். பின்னர் உறவினர்கள் சோபியாவிற்கு அறிவுரை கூறியதை தொடர்ந்து மனம் திருந்திய சோபியா, அந்த நபருடன் பேசுவதைத் தவிர்த்தார்.
எனினும் சந்தேகப்பார்வையில் இருந்த முஜைதீன் அடிக்கடி மனைவி சோபியாவிடம் வாக்குவாதம் செய்தார். அவர் செல்போனில் பேசும்போதெல்லாம் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு அடித்து, உதைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சோபியா தனது தோழி ஒருவருடன் செல்போனில் பேசி இருக்கிறார். அப்போது மது போதையில் அங்கு வந்த முஜைதீன் ஆவேசத்தில் மனைவி சோபியாவை சந்தேகப்பட்டு, அவரிடம் வாக்குவாதம் செய்து உள்ளார். சோபியா எவ்வளவோ எடுத்துக் கூறியும், முஜைதீன் அதனை பொருட்படுத்தாமல், அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி, தரையில் போட்டு உடைத்தார். மேலும் கறிவெட்டும் கத்தியால் மனைவி சோபியாவை குத்தி கொலை செய்து இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.