அம்பத்தூர் தொழிற்பேட்டை அத்திப்பட்டு பகுதியில் தொழிலாளர் நல குடியிருப்பு பகுதியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படும் பிரச்சனையில், சொந்த அண்ணனை தம்பியே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்திப்பட்டு பகுதியில் உள்ள தொழிலாளர் நல குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர் (58)என்பவர் தனது தம்பி பாலசுப்பிரமணியன் (48) மற்றும் தாயாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளார். சங்கரின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவருக்கு குழந்தைகள் இல்லாததால் தம்பியின் குடும்பத்துடன் வசித்து வந்தார். பாலசுப்பிரமணியனுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், சங்கர் தனது தம்பியின் 12 வயது மகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக, பாலசுப்பிரமணியனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, அண்ணன் சங்கரை கோயம்பேடு அருகே உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் பாலசுப்ரமணியம் சேர்த்தார். ஆனால் விடுதியில் இருந்த சங்கர் திடீர் திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பாலசுப்ரமணியம் வீட்டிற்கு வந்து இரவு தங்கும் போது அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பின்னர் சங்கரை அவரது சொந்த ஊரான திண்டிவனம் அருகே உள்ள முருங்கை கிராமத்திற்கு பாலசுப்பிரமணியன் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அத்திப்பட்டு பகுதிக்கு வந்த சங்கர், தனது தம்பியின் மகளிடம் மீண்டும் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு சங்கர் வந்ததால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன், எதற்குடா எங்கள் வீட்டிற்கு மீண்டும் வந்தாய் என்று கூறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் கோபத்தின் உச்சிக்கே சென்ற பாலசுப்ரமணியன் வீட்டினுள் இருந்த கத்தியால் சங்கரை வயிறு, மார்பு, கழுத்து போன்ற பகுதிகளில் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பத்தூர் பகுதியில் அப்பா முறையில் உள்ள பெரியப்பாவே சிறுமியிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்ட சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.