தமிழக செய்திகள்

22 ஆண்டுகளாக எஞ்சின் ஆயிலை குடித்து வாழும் விசித்திர மனிதர்!

வாகன இன்ஜின் ஆயிலில் காரீயம் போன்ற ஆபத்தான நச்சு இரசாயனங்கள் நிறைந்துள்ளது.

ஓசூரில் பொதுமக்கள் முன்னிலையில் சபரிமலை பக்தர் ஒருவர், வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பழைய இன்ஜின் ஆயிலை மளமளவெனக் குடித்த விசித்திர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டீக்கடையில் நடந்த விபரீதம்

கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா பகுதியைச் சேர்ந்தவர் குமார் (48). கூலித் தொழிலாளியான இவர், ஆண்டுதோறும் சபரிமலைக்கு மாலை அணிந்து, ஓசூர் வழியாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நேற்று மாலை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு கடையில் அவர் டீ குடித்தார். அதன் பின், யாரும் எதிர்பாராத விதமாகத் தனது பாக்கெட்டில் இருந்த ஒரு பாட்டில் பழைய இன்ஜின் ஆயிலை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே வேகமாக குடித்தார்.

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

யார் இந்த "ஆயில் குமார்"?

அங்கே இருந்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, "நான் கடந்த 22 ஆண்டுகளாகத் தினமும் இந்த பழைய இன்ஜின் ஆயிலைக் குடித்து வருகிறேன். இதனால் அனைவரும் என்னை 'ஆயில் குமார்' என்றே அழைக்கிறார்கள்.

மெக்கானிக் கடைகளுக்குச் சென்று இந்த ஆயிலை வாங்கிக் கொள்வேன். எனக்குச் சாதாரண உணவுகள் எதுவும் செரிப்பதில்லை, உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

அதனால் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, எப்போதாவது ஒருமுறை டீ குடிப்பேன், மற்றபடி இந்த ஆயில் தான் என் உணவு" என்று கூறினார்.

மருத்துவர்களின் எச்சரிக்கை

குமார் 22 ஆண்டுகளாக இப்படிச் செய்வதாகக் கூறினாலும், இது அரியவகை உளவியல் அல்லது உடல்நிலை மாற்றமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வாகன இன்ஜின் ஆயிலில் காரீயம் போன்ற ஆபத்தான நச்சு இரசாயனங்கள் நிறைந்துள்ளதால், இதைப் பின்தொடர்ந்து பொதுமக்கள் யாரும் இத்தகைய உயிருக்கே ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.