செங்குன்றம் புழல் ஏரிக்கரை பகுதியிலும் ஏராளமானோர் தர்ப்பண சடங்குகளை நிறைவேற்றி, முன்னோரை வணங்கினர். பலரும் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமான மக்கள் கடற்கரை, குளம் மற்றும் நீர் நிலைகளில் கூடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் அதிகாலை முதலே ஏராளமானோர் திரண்டனர். கடலில் நீராடிவிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் தெப்பக்குள கரைகளிலும் காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அங்கிருந்த புரோகிதர்கள் மூலம் தங்கள் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். அதிகாலை முதலே ஏராளமானோர் திரண்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கான சடங்குகளை புரோகிதர்கள் செய்து வைத்தனர்.
செங்குன்றம் புழல் ஏரிக்கரை பகுதியிலும் ஏராளமானோர் தர்ப்பண சடங்குகளை நிறைவேற்றி, முன்னோரை வணங்கினர். பலரும் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். வீடுகளில் முன்னோர்களின் படங்களுக்கு முன்பு படையலிட்டு வழிபாடு செய்தனர். பலரும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம், ஆடைதானம் வழங்கினர்.
இன்று புரட்டாசி 4-வது சனிக்கிழமையுடன் மகாளய அமாவாசை வந்ததால் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்கலீலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் மயிலாப்பூர் முண்டககண்ணிஅம்மன் கோவில், சென்னை பாடிக்கட்டு முனீஸ்வரன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.