தமிழக செய்திகள்

மதுராந்தகம் இடைத்தேர்தல் - த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நாளை ‘ரோடுஷோ’

மாமண்டூரில் தொடங்கும் ‘ரோடுஷோ’ சரவம்பாக்கத்தில் நிறைவு பெறுகிறது.

மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து 2-வது முறையாக நாளை மதுராந்தகம் செல்லும் முதலமைச்சர் விஜய் பிரமாண்ட ‘ரோடுஷோ’ நடத்தி பிரசாரம் செய்கிறார்.

மதுராந்தகம் தொகுதி

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் த.வெ.க.வினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆத ரித்து த.வெ.க. தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடந்த 25-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

பொதுக்கூட்டம்

இந்நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை மதுராந்தகம் ஹைவே ஓட்டல் அருகே நடக்கிறது. கூட்டத்தில் த.வெ.க. பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், ராஜ்குமார் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

பிரமாண்ட ‘ரோடுஷோ’

இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து 2-வது முறையாக நாளை மதுராந்தகம் செல்லும் முதலமைச்சர் விஜய் பிரமாண்ட ‘ரோடுஷோ’ நடத்தி பிரசாரம் செய்கிறார். நாளை பிற்பகல் தொகுதிக்குட்பட்ட மாமண்டூரில் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் விஜய் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.

மாமண்டூரில் தொடங்கும் ‘ரோடுஷோ’ சரவம்பாக்கத்தில் நிறைவு பெறுகிறது. முதலமைச்சர் பிரசாரம் செய்வதையொட்டி மதுராந்தகம் தொகுதி முழுவதும் இன்று முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் தடுப்பு வேலிகள் சாலை யோரங்களில் இருபுறமும் அமைத்து பொதுமக்கள் சிரமமின்றி முதலமைச்சரை பார்க்கும் வகையிலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

5 கிலோ மீட்டருக்கு ஒரு எம்.எல்.ஏ. வீதம் நின்று பிரசாரத்தை ஒருங்கிணைக்க இருக்கின்றனர். பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச் செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT