தமிழக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தாராபுரம் தொகுதி

தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். ஆனால் அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தநிலையில், தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கல்

தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெலிக்ஸ்ராஜா தலைமையிலான அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இதற்காக தேர்தல் பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டு, வேட்புமனு படிவங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு பணிகளுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். இதற்காக 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் த.வெ.க., தி.மு.க.. அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கட்டுப்பாட்டு அறை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்களில் எந்த நேரமும் தெரிவிக்கலாம்.

வாக்காளர்கள் விவரம்

மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 886 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 738 பெண் வாக்காளர்கள். 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 689 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பணிகளை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுவர் விளம்பரங்கள் அகற்றம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகன ஊர்வலம் நடத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT