தமிழக செய்திகள்

பத்திரப்பதிவை தடை செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை பாதுகாத்தோம்- பி.கே. சேகர்பாபு

பட்டா மற்றும் சிட்டா போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்ததையும் கண்டறிந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம்.

சென்னை:

தி.மு.க முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சொத்துக்களைப் பாதுகாத்த ஆட்சி, திராவிட மாடல் ஆட்சிதான். 2016-ம் ஆண்டிலேயே அந்தச் சொத்துக்களின் பத்திரப் பதிவிற்குத் தடை கோரி, அன்றைய மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

தி.மு.க. அரசு

அதனைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டிலிருந்து வெவ்வேறு மாவட்டங்களில் அந்தப் பத்திரப் பதிவை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், அந்த அனைத்து முயற்சிகளையும் தி.மு.க. அரசு முறியடித்தது. 9,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இந்து சமய அறநிலையத்துறைச் சொத்துக்களை மீட்டிருக்கின்றோம்.

நிலங்கள்

பட்டா மற்றும் சிட்டா போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்ததையும் கண்டறிந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம்.

ஸ்ரீரங்கம் கோபுரம்

ஸ்ரீரங்கம் கோபுரத்தைப் பொறுத்தவரை, 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதன் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளின் சில பாகங்கள் உதிர்ந்து, கோபுரம் சரிந்தது. அதை அறிந்தவுடனேயே, அன்றைய அமைச்சராக இருந்த கே.என்.நேருவும் நானும் நேரில் ஆய்வு செய்தோம். அப்போது ஜெயபால் என்பவர் ரூ.1.75 கோடி ரூபாய் செலவில் அதனைப் புதுப்பித்துத் தருவதற்கு அனுமதி கேட்டார்.

கோபுரப்பணிகள்

ஒரே மாதத்தில் அனுமதி வழங்கி பணிகள் முடிக்கப்பட்டன. ஆகவே, இந்தக் கோபுரப்பணிகள் எந்த வகையிலும் தாமதிக்கப்படவில்லை. அதற்கு ஸ்டிக்கர் ஒட்டத்தான் அமைச்சர் சென்றிருக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் திறன் என்ன என்று ஒரு வருடத்தில் காட்டுவோம். அதிகாரிகளை மிரட்டுவது, “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று பேசுவது மட்டுமே கையில் வைத்திருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றோம்.

மக்கள் பணிகள்

அதை பார்த்தாலே, 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய ஆட்சி கடந்த திராவிட மாடல் ஆட்சி என்பது தெரியும்.

ஆன்மீகம்

ஆன்மீகம் என்றாலே தி.மு.க. அதற்கு எதிரானது என்றொரு பிம்பத்தைக் கட்டமைத்திருந்தார்கள். அந்தப் பிம்பத்தை அடித்து நொறுக்கிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.