தமிழக செய்திகள்

மதுரை நகைக்கடை கொள்ளை: 50 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு - கமிஷனர் பேட்டி!

கைது செய்யப்பட்ட நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக் கடையில் அரங்கேறிய பல கோடி ரூபாய் மதிப்பிலான கொள்ளைச் சம்பவத்தின் முழுப் பின்னணியையும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விபரங்களையும் மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கொள்ளையன் நிஷாந்த் (22) என்ற வாலிபர், கட்டுமானப் பணியில் இருந்த தனிஷ்க் நகைக் கடையின் பின்புற சாரம் மற்றும் லிஃப்ட் தடம் வழியாகக் கடைக்குள் புகுந்துள்ளார். எந்தவொரு கண்ணாடிப் பெட்டியையும் உடைக்காமல், மிகவும் சாதுரியமாக 10.3 கிலோ தங்கம் மற்றும் 1 கிலோ வைர நகைகள் என மொத்தம் 11.3 கிலோ நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டிக்கொடுத்த டாட்டூ

கொள்ளைச் சம்பவம் நடந்த பிறகு கமிஷனர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

கொள்ளையன் முகமூடி அணிந்திருந்த போதிலும், கடையின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அவனது கையில் இருந்த ஒரு குறிப்பிட்ட பச்சை குத்தப்பட்ட அடையாளம் மற்றும் அவன் அணிந்திருந்த தொப்பி ஆகியவை மூலம் அவன் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பது உறுதி செய்யப்பட்டது.

இன்ஸ்டா பிரபலம் மற்றும் தந்தை கைது

விசாரணையில், நிஷாந்த் தனது காதலியான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி என்பவரின் பணத் தேவைகளுக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டது தெரியவந்தது.

கொள்ளையடித்த நகைகளில் 5.5 கிலோ நகைகளை மீனாட்சியின் வீட்டில் கொடுத்திருந்த நிலையில், மொபைல் சிக்னல் சோதனையில் மீனாட்சி மற்றும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோரை போலீசார் முதலில் கைது செய்து 5.5 கிலோ நகைகளை மீட்டனர்.

தர்மபுரியில் சினிமா பாணி சேஸிங் - மீதி நகைகள் மீட்பு

தலைமறைவாக இருந்த முதன்மைக் குற்றவாளி நிஷாந்த், ஆம்னி பேருந்து மூலம் தப்பியோட முயன்றபோது, அவரது முகமூடி நடமாட்டத்தைக் கண்டு சந்தேகமடைந்த பேருந்து ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் அதியமான்கோட்டை செக்போஸ்ட்டில் போலீசார் பேருந்தை மறித்தனர். போலீசாரைக் கண்டதும் பேருந்து ஜன்னல் வழியாகக் குதித்துத் தப்பியோடிய நிஷாந்தை, போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மதுரையின் மாடக்குளம் மற்றும் முனியாண்டிபுரம் மலைப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மீதி 6.2 கிலோ தங்க நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மிகவும் சவாலான இந்த 60 கோடி ரூபாய் கொள்ளை வழக்கை, சிசிடிவி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம் 5 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்து, கொள்ளை போன அனைத்து நகைகளையும் மீட்ட மதுரை மாநகரத் தனிப்படை போலீசார்களுக்கு பாராட்டுக்கள்.

SCROLL FOR NEXT