தமிழக செய்திகள்

தண்டனை அறிவிக்கப்பட்டதும் தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி

ராஜா மாயமானதை அடுத்து போலீசார் அவரை தேடும் பணியை தொடங்கினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராஜா என்ற கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தப்பியோடிய கைதியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனை அறிவிப்பு:

இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிறைவடைந்தது. இந்த வழக்கில் ராஜா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதோடு இன்று அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இதற்காக ராஜாவை போலீசார் சிறையில் இருந்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர், குற்றவாளி ராஜாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசாருடன் நீதிமன்ற வளாகத்தில் ராஜா இருந்தார். அப்போது திடீரென அவர் அங்கிருந்து தப்பினார். போலீசாருக்கு தெரியாமல் நைசாக நழுவி ராஜா நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடினார். ராஜா மாயமானதை அடுத்து போலீசார் அவரை தேடும் பணியை தொடங்கினர்.

அடுத்தடுத்து சம்பவங்கள்:

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையங்களுக்கு போலீசார் விரைந்து அவரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது வரை அவர் போலீசாரிடம் சிக்கவில்லை.

தமிழகத்தில் சமீபத்தில் அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடினர். இதேபோல் சென்னை புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பியோடினர். இப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்தே தண்டனை கைதி ராஜா தப்பியோடி உள்ளார்.

SCROLL FOR NEXT