தமிழக செய்திகள்

சீமான் குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு!

சீமான் குறித்து இவ்வளவு கொச்சையாகப் பேசியும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து இணையதளங்களில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகிய இருவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதையடுத்து, மதுரை சைபர் கிரைம் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இலக்கு வைத்து யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மிகவும் கொச்சையாகவும், தரக்குறைவாகவும், அவதூறாகவும் வீடியோக்களை வெளியிட்டுப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் கடந்த ஜூலை 3-ஆம் தேதி காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித FIR-ம் பதிவு செய்யப்படவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படும் இந்த அவதூறுப் பரப்புரைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தீரன் திருமுருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை:

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் ரூ.100 கோடி பெற்றதாகப் பேசிய நபர் மீது காவல் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. ஆனால், சீமான் குறித்து இவ்வளவு கொச்சையாகப் பேசியும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது" என்று குற்றம்சாட்டினார்.

பாரபட்சமான நடவடிக்கை:

மனுதாரரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி விக்டோரியா கௌரி, காவல் துறையின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். "ஆளும் கட்சி தரப்புக்கோ அல்லது அரசுக்கோ எதிராகப் பேசினால் உடனே நடவடிக்கை எடுத்து கைது செய்கிறீர்கள். அதற்கு உங்களிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் மற்ற தலைவர்கள் விவகாரத்தில் மட்டும் ஏன் இந்தத் தாமதம்? காவல் துறை பாரபட்சமாகச் செயல்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

அரசியல் தலைவர் குறித்த பார்வை:

ஒரு தலைவரைப் பற்றி மிகவும் அசிங்கமாகவும் அவதூறாகவும் பேசுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. சீமானைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம்; ஆனால் தற்போதைய சூழலில் அவர் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அரசியல்வாதியாக உருவாகியுள்ளார்" எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவரைப் பற்றி யூடியூபர்கள் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்பதை ஏற்கவே முடியாது எனத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு:

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,

1.சீமான் குறித்து அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

2. வழக்குத் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

3. இணையதளங்களில் மற்றும் யூடியூப்பில் பரப்பப்பட்டுள்ள அந்த அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து, சீமான் குறித்து அவதூறாக பேசிய யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.