சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை பட்டினம்பாக்கத்தில் சுமார் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதுகுறித்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு, அரசியல் கட்சிகளும், மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் கோடம்பாக்கத்தை சேர்ந்த வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், ‘‘தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் உள்ளதாக, தற்போது ஆட்சியில் உள்ள த.வெ.க., தலைமையிலான அரசு அறிவித்து உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு ரூ.1,200 கோடி செலவு செய்வதை விட, புனித ஜார்ஜ் கோட்டையில், தற்போது இயங்கி வரும் தலைமை செயலக கட்டடத்தைப் புதுப்பித்து பயன்படுத்தலாம். இதனால், பெரும் தொகை செலவு செய்வதை தவிர்க்கலாம். மக்கள் வரிப்பணமும் வீணாகாது.
சென்ட்ரல் ரெயில் நிலையம், ஐகோர்ட்டு, அரசு பொது மருத்துவமனை ஆகியவைகளுக்கு மிக அருகில் உள்ள தலைமை செயலகத்தை இடமாற்றினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், பட்டினம்பாக்கத்தில் அங்குள்ள மீனவர்களின் நலனும் பாதிக்கப்படும். கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட கோரி, செப்டம்பர் 12ல் தமிழக அரசின் தலைமை செயலர், பொது பணித்துறை தலைமை பொறியாளர், தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிடும்படி உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கில் தீர்வு எட்டும் வரை, தலைமை செயலக கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது பொதுநல வழக்காக கருத முடியாது. எனவே, அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக கூறினர். இதையடுத்து இந்த வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.