தமிழக செய்திகள்

வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

வெற்றிப் பயணத் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்?

வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்துள்ள வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

வெற்றிப் பயணம்

தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விடியல் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, வெற்றிப் பயண திட்டம் என்ற பெயரில் கடந்த 2-ந்தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

த.வெ.க. ஆட்சி

த.வெ.க. தலைமையில் ஆட்சி அமைந்தபின், மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்ய வகை செய்யும். வெற்றிப் பயண திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

ரூ.6 ஆயிரம் கோடி

அந்த மனுவில், வெற்றிப் பயண திட்டம் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும். பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமையை மீறும் செயலாகும்.

பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை

வெற்றிப் பயண திட்ட பயனாளிகளுக்கான கட்டணமாக. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதே போல இழப்பீடு வழங்கி, தனியார் பஸ்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

தடை வேண்டும்

சட்டசபையில் முதலமைச்சரின் அறிவிப்பு அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தொடர்பாக அரசாணை எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்.

இந்த வழக்கு முடியும் வரை, வெற்றிப் பயண திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

சென்னை ஐகோர்ட்

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈரோட்டில் இரண்டு வழித்தடங்களில் மட்டும் பஸ்களை இயக்கும் தனியார் பஸ் உரிமையாளர் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் வெற்றிப் பயணத் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் வாதிட்டார்.

வாபஸ்

இதையடுத்து, இதை பொதுநல வழக்காக கருத முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற அனுமதித்தனர்.

SCROLL FOR NEXT