மதுரை ஐகோர்ட்
தமிழக செய்திகள்

பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வழிகாட்டுதல்களை உருவாக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நிபந்தனை விதிக்கப்பட்டால், அது அரசு அலுவலகங்களில் ஊழலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தக்கூடும்.

அரசு ஊழியர்கள் பணியின்போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது பற்றிய வழிகாட்டுதல்களை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

லஞ்ச வழக்கு

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மாவட்டம் முக்கூடலில் சார்பதிவாளராக கடந்த 2021-ம் ஆண்டில் பணியாற்றினேன். அப்போது எனது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.45 ஆயிரத்தை கைப்பற்றினர். இந்த நடவடிக்கை தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் என் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், அந்த தொகை திருமண செலவுக்காக மனுதாரர் வைத்திருந்த பணம்தான். எனவே அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என வாதாடினார்.

சுற்றறிக்கை

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

லஞ்ச ஒழிப்பு துறையினரால் நடத்தப்பட்ட திடீர் ஆய்வின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச பண அளவு குறித்து எந்தவொரு வழிகாட்டுதலோ அல்லது நிபந்தனையோ இல்லை என்றே தெரிகிறது.

இதே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிற வழக்குகளில், வெறும் 1,500 ரூபாயை வைத்து இருந்ததற்காகக்கூட லஞ்ச ஒழிப் புத்துறையால் வழக்குகள் தொடரப்பட்டு இருப்பது தெரியவருகிறது. இந்த விவகாரத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் உதவுமாறு கோரப்பட்டது. இதையடுத்து பதிவுத்துறை சார்பில் 2009-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரத்தை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அதில், பதிவுத்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது பணம் வைத்திருப்பது தொடர்பான சில வழிகாட்டுதல்களை இந்த சுற்றறிக்கை அறிவுறுத்துகிறது. இதுதொடர்பாக பதிவேடுகளை பராமரிக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

சாத்தியக்கூறுகள்

இது பதிவுத்துறைக்கு மட்டுமே அனுப்பப்பட்ட சுற்றறிக்கையாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான வழிகாட்டுதலோ அல்லது அரசாணையோ வெளியிடப்படவில்லை என்றே தெரிகிறது.

எனவே இந்த விவகாரம் குறித்து அரசு மட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டி உள்ளது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அந்தந்தத் துறைகளில் ஏதேனும் வழிகாட்டுதல்கள் உள்ளதா என்பது குறித்தும், பணியில் இருக்கும்போது அரசு ஊழியர்கள் வைத்திருக்கக்கூடிய பணத்தின் அளவை நிர்ணயிக்கும் வகையில் சீரான வழிகாட்டுதல்கள் அல்லது அரசா ணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அரசின் கருத்துகளை இந்த கோர்ட்டு எதிர்பார்க்கிறது.

வழிகாட்டுதல்கள்

ஏறக்குறைய அனைத்து கட்டணங்களையும் டிஜிட்டல் மூலம் மக்கள் செலுத்தக்கூடிய இன்றைய காலகட்டத்தில், அலுவலகத்திற்கு செல்லும்போது கணிசமான அளவு ரொக்கப் பணத்தை எடுத்து செல்வது தொடர்பான நடைமுறை குறித்து, அரசு ஒரு பொருத்தமான வழிகாட்டுதலை நிர்ணயிப்பதன் மூலம் தீர்வு காணவேண்டும். இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால், அது அரசு அலுவலகங்களில் ஊழலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தக்கூடும். அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையற்ற வகையில் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும்.

ஊழலை ஒழிப்பதை அரசு தனது நோக்கமாக கொண்டுள்ளது. இதுதொடர்பாக வகுக்கப்படும் வழிகாட்டுதல்களானது, ஊழலற்ற நிர்வாகத்தை அடைவதற்கான அரசின் நோக்கத்தை வலுப்படுத்தக்கூடும். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு வருகிற வருகிற 3-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.