தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாமாயில் பாக்கெட்டுகள் வினியோகத்தில் விகிதாசார பிரச்சனை எழுந்ததால், செப்டம்பர் 29-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் நவம்பர் 2-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை வாயிலாக மக்களுக்கு பாமாயில் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு லிட்டர் வீதம் சுமார் 600 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை டெண்டர் அறிவிப்பை கடந்த ஜூன் 5-ந்தேதி வெளியிட்டது.
இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த செப்டம்பர் 8-ந்தேதி டெண்டர் திறக்கப்பட்டு, 4 நிறுவனங்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யும் டெண்டர் ஒதுக்கப்பட்டது.
இதில், முதல் கட்டமாக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை வருகிற 29-ந்தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு இந்த நிறுவனங்கள் வினியோகம் செய்ய கடந்த செப்டம்பர் 29-ந்தேதி உத்தரவிடப்பட்டது. வினியோகம் செய்யவேண்டிய பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாசார அடிப்படையில் பிரிக்கவில்லை என்று கூறி நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெண்டர் எடுத்துள்ள கே.டி.வி. ஹெல்த் புட் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதில், ‘‘200 லட்சம் பாக்கெட்டுகளை முதலில் வினியோகம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 200 லட்சம் பாக்கெட்கள் வினியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள எம்.ஜி.எம். நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளும், 210 லட்சம் பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள குமார் ஆக்ரோ நிறுவனம் 52 லட்சம் பாக்கெட்டுகளும், 180 லட்சம் பாக்கெட்டுகளை வழங்கவேண்டிய இன்டகரேட் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளும், 360 லட்சம் பாக்கெட்டுகளை வழங்கவேண்டிய எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளையும் வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது வினியோகம் செய்யவேண்டிய பாக்கெட்டுகள் அடிப்படையில் சரியான விகிதாசார அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 360 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளை வழங்கவேண்டும் என்றும் 150 லட்சம் பாக்கெட்டுகளை வினியோகம் செய்யவேண்டி எம்.ஜி.எம். ஆயில் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளை வழங்கவேண்டும் எனறு உத்தரவிட்டது சரியான அல்ல.
எனவே, பாமாயில் வினியோகம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 29-ந்தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விகிதாசார அடிப்படையில் பாமாயில் பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய உத்தரவிடும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.சரவணன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, பாமாயில் வினியோகம் தொடர்பான செப்டம்பர் 29-ந்தேதி நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.