சென்னை ஐகோர்ட் 
தமிழக செய்திகள்

கோவில்களின் வரவு, செலவு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

எஞ்சிய கோவில்களின் அறிக்கை விவரங்களும் விரைவில் பதிவேற்றப்படும் என்றும், முழுமையான தணிக்கை அறிக்கைகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவில்களின் நிதி விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 6,931 கோவில்களின் விவரங்கள் ஏற்கெனவே பதிவேற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள கோவில்களின் தகவல்களை 2 மாதங்களில் முடிக்க வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வரவு, செலவு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக்கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 6,931 கோவில்களின் தணிக்கை அறிக்கை விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய கோவில்களின் அறிக்கை விவரங்களும் விரைவில் பதிவேற்றப்படும் என்றும், முழுமையான தணிக்கை அறிக்கைகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு தள்ளிவைப்பு

இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான மனுதாரர் டி.ஆர்.ரமேஷ், முழுமையான தணிக்கை அறிக்கைகள் இன்னும் பதிவேற்றப்படவில்லை என்றும், தற்போது வெளியிடப்பட்டுள்ள விவரங்களில்கூட இடம்பெற வேண்டிய முக்கிய தகவல்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, தணிக்கைக்கு உட்பட்ட கோவில்களின் அறிக்கை விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியை 2 மாதங்களுக்குள் முடித்து விடுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் தெரிவித்தார். அவரது வாக்குறுதியை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 18-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT