திருமணத்தை மீறிய உறவு காரணமாக பெற்ற குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில், அபிராமி என்ற பெண்ணுக்கு ஜாமின் வழங்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த விஜய்- அபிராமி தம்பதிக்குத் திருமணமாகி, நான்கு மற்றும் ஆறு வயதில் 2 குழந்தைகள் இருந்தனர். டிக்டாக்கில் பிரபலமான அபிராமிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பிரியாணிக் கடையில் பணியாற்றும் மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
திருமணம் தாண்டிய இந்த உறவுக்குத் தடையாக இருந்த தனது 2 குழந்தைகளுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பாலில் விஷம் வைத்து, அபிராமி கொலை செய்தார். பின்னர், மீனாட்சி சுந்தரத்துடன், கேரளா தப்பிச் செல்ல முயன்றபோது இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம், அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் வழங்கக் கோரியும் அபிராமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அபிராமி தரப்பில், குற்ற சம்பவத்தில் மனுதாரரை தொடர்புபடுத்த எந்த நேரடி ஆதாரமும் இல்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், வழக்கில் முதல் சாட்சியான அபிராமியின் கணவர் அளித்த சாட்சியத்தில், குழந்தைகளுக்கு கொடுத்த பால் கசப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். வழக்கு ஆதாரங்களை பார்க்கும் போது, தற்போதைய நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க தகுதியான வழக்கு இது அல்ல. எனவே, அபிராமியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
மேலும், பிரதான மேல் முறையீட்டு வழக்கை நவம்பர் 4-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.