சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த தகிக்கும் வெப்பம் காரணமாக, சென்னையில் தற்போது 'மெட்ராஸ்-ஐ' எனப்படும் கண் விழி வெண்படல அழற்சி நோய் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக, சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் ஆஸ்பத்திரிக்கு மெட்ராஸ்-ஐ பாதிப்புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஓரிருவர் மட்டுமே அவ்வப்போது வந்த நிலையில், தற்போது தினசரி 15 முதல் 20 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இதே போல, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மெட்ராஸ்-ஐ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிவந்த கண்களுடன், கருப்பு கண்ணாடிகளை அணிந்தவாறு சிகிச்சைக்காக காத்திருப்பதை காண முடிகிறது. கண் சிவத்தல், அரிப்பு, கண்ணில் நீர் வடிதல், உறுத்தல் மற்றும் கண் இமைகளில் பிசுபிசுப்பு ஏற்படுதல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
இதுகுறித்து கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் யஷ்வந்த் ஆர்.ராஜகோபால் கூறியதாவது:-
மெட்ராஸ்-ஐ பாதிப்பு பாக்டீரியா தொற்று மூலம் மனிதர்களுக்கு பரவி வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அடினோ வைரஸ் மூலம் இந்த தொற்று பரவுகிறது. மெட்ராஸ்-ஐ கண்களை மட்டும் இல்லாமல் தொண்டையையும் பாதிக்கிறது. எனவே. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சுய மருத்துவம் செய்துகொள்வதை தவிர்க்க வேண்டும். மருந்து கடைகளில் விற்கப்படும் சொட்டு மருந்துகளை டாக்டர்கள் ஆலோசனையின்றி வாங்கி பயன்படுத்தக் கூடாது.
தொற்று பாதிக்கப்பட்டவரின் கண்களை பார்த்தால் மெட்ராஸ்-ஐ பரவாது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கண்களை துடைப்பதற்கு பயன்படுத்திய துண்டு, கைக்குட்டைகளை மற்றவர்கள் பயன்படுத்தும் போதுதான் இந்த தொற்று பரவுகிறது. எனவே, மெட்ராஸ்-ஐ பாதிக்கப்பட்டவர்கள் துண்டு, கைக்குட்டைகளை பயன்படுத்தாமல் 'டிஷ்யூ' பேப்பர்களை பயன்படுத்தினால் தொற்று பரவலை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.