மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது. தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.
அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடந்தது.
இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது. தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளதால் இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.