தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும். 15-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து பருவழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 9.4 கி.மீ உயரம் வரை பரவியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (13-ந்தேதி) தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் இன்று தெரிவித்து உள்ளது.
இதையடுத்து இன்று முதல் 15-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தமிழத்தில் கனமழைபெய்யும் எனவும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று காலை சென்னையில் சென்ட்ரல், ராயபுரம் உள்ளிட்ட சில இடங்களில் லேசான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.