சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள், குடியிருப்புகள் மழைநீரால் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். ராட்சத டிராக்டர்கள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், வேளச்சேரி, சைதாப் பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னை மாநகரின் பெரும்பாலான இடங்களிலும் விடிய விடிய விட்டு விட்டு மழை கொட்டியது.
புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பல்லாவரம், ஆவடி, எண்ணூர், திருவெற்றியூர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
சென்னை மாநகரம் முழுவதும் சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் அதிக அளவில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னை புரசைவாக்கம், பிரிக்ளின் ரோடு, சுந்தராம்பாள் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பிரிக்ளின் ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஓரமாக தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இன்று காலை 9 மணி வரையிலும் இந்த சாலையில் தேங்கிய தண்ணீர் வடியாமல் இருந்தது. இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். அந்த சாலையில் சாதாரண நாட்களிலேயே நெரிசல் ஏற்படுவது உண்டு.
இந்த நிலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் மெயின் ரோட்டிலும் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருந்தது. பெரிய மரம் ஒன்று அந்த பகுதியில் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மரத்தை வெட்டி அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தி.நகர் பசூல்லா சாலையில் மழை நீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது. கொளத்தூர் லோகநாதன் தெருவில் பலத்த மழையுடன் காற்றும் வீசியதால் ராட்சத மரம் ஒன்று சாய்ந்து விழுந்து 2 கார்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது.
கொரட்டூர் வடக்கு அவென்யூ மத்திய நிழற் சாலை, பட்டரைவாக்கம் கருக்கு பிரதான சாலை, மாதனாங்குப்பம், கள்ளிக்குப்பம், பாலாஜி நகர், புதூர் போன்ற பகுதிகளில் நேற்று இரவு முதல் சுமார் 4 செ.மீ. அளவுக்கு பெய்தது.
இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று வியாசர்பாடி, சூளைமேடு, பெரியமேடு, வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
சென்னை தி.நகர் பகுதியில் பனகல் பார்க், உஸ்மான் ரோடு, ஜீவா பூங்கா பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது.
வியாசர்பாடி கணேசபுரத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் பிரதான சாலையில் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் வெள்ளம்போல் தேங்கி காணப்பட்டது. அதனை வெளியேற்றும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்றது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடுமையான நெரிசலில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணம் மேற்கொண்டனர்.
பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகளிலும் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் கீழேயும் தேங்கிய தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பட்டாளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.
செங்குன்றம் பாடியநல்லூர் எம்.ஏ.நகர் மேம்பாலம் சர்வீஸ் சாலை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அதில் நீந்தி சென்றனர்.
அங்குள்ள மேம்பாலத்திற்கு கீழே சர்வீஸ் சாலை முழுவதும் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக சென்றவர்களும் கடும் பாதிப்பை சந்தித்தனர்.
வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கபாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நேற்று இரவு முதல் இன்று காலை வரை நீடித்தது.
இதுபோன்று சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் ராட்சத டிராக்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.