சென்னை மாதவரத்தில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். 42 வயதான இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது மகன் இன்ப செல்வன் (8). இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
கார்த்திகேயன் நேற்று தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் மணலிக்கு சென்றுவிட்டு பின்னர் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்கள். சென்னை மாதவரம் ஆந்திர பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திர பஸ் ஒன்று வெளியே வந்தது. அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி டிரைவர் பஸ் வருவதை பார்த்து பிரேக் பிடித்துள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக லாரி பிரேக் பிடிக்காமல் பஸ் பின் பகுதியில் மோதியது. இதில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது.
மோட்டார் சைக்கிளில் இருந்து கார்த்திகேயன் அவரது மனைவி பிரேமலதா மகன் இன்ப செல்வன் மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது வந்த கண்டெய்னர் லாரி சக்கரத்தில் 3 பேரும் சிக்கினார்கள். இதில் அவர்கள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் புழல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி 3 பேரின் உடலையும் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் அன்பரசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தில் 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.