தமிழக செய்திகள்

ஆற்காடு அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி 2 டிரைவர்கள் பலி

டிரைவர்கள் 2 பேரும் லாரிகளின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கரிக்கந்தாங்கலை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அருண்குமார் (வயது 23). லாரி டிரைவர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (25).லாரி டிரைவர்.

இன்று காலை அருண்குமார் செய்யாறிலிருந்து ஆற்காடு நோக்கி லாரியை ஓட்டி வந்தார். இதே போல் நரேஷ் ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி லாரியை ஓட்டி வந்தார். ஆற்காடு அடுத்த கலவை கூட்ரோடு, முள்ளுவாடி அருகே வந்தபோது 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் 2 லாரிகளின் முன்பகுதி நொறுங்கியது. டிரைவர்கள் 2 பேரும் லாரிகளின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அப்பகுதி மக்கள் இதுகுறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராணிப்பேட்டை டி.எஸ்.பி கனகராஜ், கலவை இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் லாரிகளை தனித்தனியாக பிரித்தனர். லாரி டிரைவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.