தமிழக செய்திகள்

உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான லோகோ வெளியீடு

14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.

மாலை மலர்

உலக கோப்பை ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஹாக்கிப் போட்டி 1979-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை 13 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. ஜெர்மனி அதிகபட்சமாக 7 தடவை உலக கோப்பை ஜூனியர் ஆக்கி பட்டத்தை கைப்பற்றி உள்ளது.

இந்தியா (2001, 2016), அர்ஜென்டினா தலா 2 முறையும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றன. கடைசி யாக இந்த போட்டி 2023-ம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலா லம்பூரில் நடை பெற்றது. இதில் ஜெர்மனி வெற்றி பெற்றது.

14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் 4-வது முறையாக நடைபெறுகிறது.

இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு டெல்லியிலும், 2016-ம் ஆண்டு லக்னோவிலும், 2021-ல் புவனேஷ்வரிலும் நடைபெற்றது.

14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.

இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஜெர்மனி, அர்ஜென்டினா, கனடா, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, எகிப்து உள்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. அரை இறுதி மற்றும் இறுதி போட்டி சென்னையில் நடக்கிறது.

சென்னை, மதுரையில் நடைபெறும் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இலச்சினை (லோகோ) இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடத்தப்படுகிறது. மதுரையில் இதற்கான உள்கட்டமைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரத்திற்கு இணையாக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மதுரையில் இந்த போட்டியை நடத்துவதன் மூலம் தென் மாவட்ட மக்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும்.

24 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை சிறப்பாக நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.65 கோடி ஒதுக்கி உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதோடு ஜூனியர் உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் பரிமாற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஹாக்கி இந்தியா அமைப்பும் கையெழுத்திட்டன.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Proud to announce that Tamil Nadu is gearing up to host yet another international sporting spectacle– the Men's Junior Hockey World Cup 2025 – in Chennai and Madurai this December.I briefed the media about the preparations being made under our #DravidianModel government, with a… pic.twitter.com/ngB0JIcCdo