தாமிரபரணி ஆற்றின் நீரை நம்பியுள்ள முக்கியமான குளங்களில் ஒன்றாக ஆறுமுகமங்கலம் குளம் விளங்குவதால், கால்நடைகள் மற்றும் விவசாயத்தின் நலனை கருத்தில் கொண்டு தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆறுமுகமங்கலம் குளத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
இதனால் தினந்தோறும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் குடிநீருக்காக பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. நீர்நிலைகளில் எஞ்சியுள்ள சொற்ப தண்ணீரை தேடி மாடுகளும், ஆடுகளும் அலைந்து வருகின்றன.
ஏரல் அருகே அமைந்துள்ள ஆறுமுக மங்கலம் குளம், தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியமான பெரிய குளங்களில் ஒன்றாகும். இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
தற்போது நிலவி வரும் வறட்சி மற்றும் போதிய மழையின்மை காரணமாக ஆறுமுகமங்கலம் குளமும் வறண்டு காணப்படுகிறது. குளத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் குட்டைகள் போல் சிறிதளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த தண்ணீரைத் தேடி அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் குளத்தில் குவிந்து வருகின்றன. குட்டைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை மாடுகளும், ஆடுகளும் குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்கின்றன.
மேலும், குளத்தில் ஆங்காங்கே முளைத்துள்ள சிறு பச்சை இலைகள் மற்றும் தழைகளை உண்டு பசியையும் போக்கி வருகின்றன.
தற்போது குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரும் இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக வற்றிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.