தமிழக செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு

5000 காவலர் குடும்பம் பயன்பெறும் வகையில் காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.

காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.

இந்நிலையில், காவல்துறைக்கும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 5000 காவலர் குடும்பம் பயன்பெறும் வகையில் காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள் அமைக்க ரூ.431 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரிப்பதற்கும், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதை திறம்பட நிர்வகிப்பதற்கும், காவல் துறையினருக்கு போதுமான குடியிருப்பு வசதிகள் இன்றியமையாதவையாகும். இந்த நோக்கில், மாவட்டங்களில் காவல் துறையினருக்கான குடியிருப்பு வளாகங்களைக் கட்டுவதற்காக 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, பெண்கள் தலைமையிலான காவல் பணிகள், அவசரகால நடவடிக்கை மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' அமைக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான காவலர்கள், கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள், பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்காக 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.