லயன்ஸ் சபாரி செல்லும் பாதைகளில் உள்ள புதர் மண்டிய தாவரங்கள் அகற்றம் மற்றும், தடுப்பு கம்பிகள், சுற்றுச்சுவர்கள் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் லயன் சபாரி தொடங்கப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளுடன் ஏராளமான பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள லயன்சபாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. திறந்த வெளியில் சுற்றும் சிங்கங்களை வாகனங்களில் சென்று பார்ப்பது சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
இந்தநிலையில் சிங்கங்கள் மற்றும் மான்கள் உலாவும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் சபாரி சேவை வருகிற 14-ந்தேதி முதல் 20 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் சபாரி சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், சேவை தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மிருகக் காட்சி சாலையில் இருந்து ஜிம்பா மற்றும் நாலா என்ற ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் கடந்த 3 மாதத்திற்கு முன்பு வண்டலூர் பூங்காவுக்கு வந்தது. இந்த சிங்கங்கள் தற்போது புதிய சூழலுக்குப் பழகி இப்போது தங்கள் இருப்பிடத்திற்கு பின்னால் உள்ள திறந்தவெளியில் சுற்றிவருகின்றன. லயன் சபாரி தயாரானதும் இந்த ஜிம்பா-நாலா ஜோடி சிங்கங்கள் ஏற்கனவே உள்ள சிங்கங்களுடன் லயன் சபாரி இடத்தில் இணையும்.
இதன் மூலம் அப்பகுதியில் மொத்த சிங்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயரும். மேலும் 4 சிங்கங்கள் பூங்காவில் உள்ளன. பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்த சிங்கங்களை லயன்சபாரி இடத்தில் விடமுடியவில்லை என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். லயன்ஸ் சபாரி செல்லும் பாதைகளில் உள்ள புதர் மண்டிய தாவரங்கள் அகற்றம் மற்றும், தடுப்பு கம்பிகள், சுற்றுச்சுவர்கள் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் லயன் சபாரி தொடங்கப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.