தமிழக செய்திகள்

முதியோர் உதவித்தொகைக்கு ஆதார் இணைப்பில் உள்ள வங்கிக்கணக்கு அவசியம் என்பதை கட்டாயமாக்கக் கூடாது - அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்!

ஆதார் மையங்களுக்கு, வங்கிகளுக்கு உடன் அழைத்துச் செல்ல உதவி இல்லாதவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

முதியோர் ஓய்வூதியத்தை ஆதார் அட்டையுடன் இணைத்த வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் புதிய விதியை கட்டாயமாக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

அவதிக்குள்ளாகும் முதியோர்கள்

“முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதால் பெரும் அவதிகளுக்கு ஆளாகி இருப்பதாக மூத்த குடிமக்கள் பலர் தெரிவித்துள்ளார்கள்.

ஆதார் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள், பெயர்களில் உள்ள வேறுபாடுகள் உள்ளிட்ட பிரச்சனைகளால் முதியோர் ஓய்வூதியம் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு தடைபட்டிருக்கிறது என்றும், முதியோர் ஓய்வூதியம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படாததால் மூத்த குடிமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும் எண்ணிக்கையில் வந்து முறையிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டாயம் ஆக்கக் கூடாது

கடுமையான வெயில் சுட்டெரிக்கும் வேளையில், இத்தகைய அலைச்சல் உடல்ரீதியாகவும் அவர்களை பாதிக்க கூடியது. ஆதார் மையங்களுக்கு, வங்கிகளுக்கு உடன் அழைத்துச் செல்ல உதவி இல்லாதவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இந்த திடீர் அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு மன உளைச்சலையும், அலைச்சலையும் ஏற்படுத்தி இருப்பதை கருத்தில் கொண்டு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படுவது என்பதை கட்டாயம் ஆக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT