மே தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும், பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் 'மே' தின திருநாளாகும்.
"இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி! உருக்குப்போன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிற்பவன் தொழிலாளி!"
என்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்புஜி.ஆர். அவர்கள் தொழிலாளர்களின் சிறப்புகளை, தனது உணர்ச்சிமிகு பாடலின் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார்.
உழைக்கும் தொழிலாளர்கள் அனைத்து வகைகளிலும் சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும்" என்ற உள்ளத நோக்கத்தோடு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர், தமது ஆட்சிக் காலங்களில் பல்வேறு முத்தான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் காட்டினார்கள்.
அதேபோல், இருபெரும் தலைவர்களைத் தொடர்ந்து, அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான கழக ஆட்சியிலும், தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்: உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும், உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை தெரிவித்துக்கொண்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.