தமிழக செய்திகள்

பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் சாலையை கம்பீரமாக கடந்த சிறுத்தை

வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என்று ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

வனத்துறையால் நடத்தப்படும் வேன் சபாரி மற்றும் அதிகாலை-மாலை நேர பயணங்களின்போது சிறுத்தைகளை அருகில் கண்டு ரசிக்கும் பார்க்கும் வாய்ப்பு உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் டாப்சிலிப் அமைந்து உள்ளது. இந்த பகுதியில் புலி, சிறுத்தை, வரையாடு, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகரித்து காணப்படுகின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகம்

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறை ஜீப் மூலம் வனப்பகுதிகளுக்கு சென்று அங்கு திரியும் சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டுகளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர் காலமாக இருப்பதால் வனவிலங்குகள் சாலையோரம் உலா வர வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக அங்கு காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5:30 மணி வரையும் சுற்றுலா பயணிகள் வனத்துறை சபாரிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

சாலையை கடந்த சிறுத்தை

ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் வன சவாரி செல்ல விரும்புவோர் தமிழ்நாடு வனத்துறை இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று வந்திருந்தனர். பின்னர் அவர்கள் வனத்துறை வாகனம் மூலம் சபாரி பயணத்தை மேற்கொண்டனர்.

டாப்சிலிப் பகுதியில் இருந்து பரம்பிக்குளம் செல்லும் சாலையில் வாகனம் சென்று கொண்டு இருந்தது. அப்போது எருமைப்பாறை பகுதியில் ஒரு சிறுத்தை சாலையோரம் நிற்பது தெரியவந்தது. இதனால் வனத்துறை வாகனம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

வீடியோ வைரல்

தொடர்ந்து அந்த சிறுத்தை கம்பீரமாக சாலையை கடந்து மறுபுறம் சென்றது. இந்த காட்சியை வனத்துறை வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் வாகனத்தில் இருந்த ஒரு சிலர் செல்போன் மூலம் டாப்சிலிப் வனச்சாலையை புலி கடந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் முதல் பரம்பிக்குளம் வரையிலான வனச்சாலை மற்றும் வால்பாறை மலைப்பாதைகளில் சிறுத்தைகள் சாலையை கடப்பதும், இரவுநேர சவாரியின் போது தென்படுவதும் வழக்கமான நிகழ்வு தான்.

வனத்துறை எச்சரிக்கை

மேலும் கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் புகுந்து வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அடர்ந்த டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டு விடப்படுகின்றன.

வனத்துறையால் நடத்தப்படும் வேன் சபாரி மற்றும் அதிகாலை-மாலை நேர பயணங்களின்போது சிறுத்தைகளை அருகில் கண்டு ரசிக்கும் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்லும்போது வாகனங்களை விட்டு இறங்கக் கூடாது, வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என்று ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

SCROLL FOR NEXT