ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகா ஜனூர், பீம்ராஜ்நகர், ஒசூர் பகுதியில் கடந்த 3 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, காவல் நாய்களையும் சிறுத்தை தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமலும் கால்நடைகளை மேய்க்க முடியாமலும் கடும் அச்சத்தில் இருந்து வந்தனர்.
ஒரு சில விவசாயிகள் சிறுத்தை அச்சத்தால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் விற்பனையும் செய்து விட்டனர். கல்கு வாரியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க அப்பகுதி கிராம மக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்தனர். வனத்துறையினரும் சிறுத்தை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர் ஆனால் சிறுத்தை போக்கு காட்டி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொட்ட காஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுலோச்சனா(30) தனது வீட்டில் காவல் நாய் வளர்த்து வருகிறார். நேற்று இரவு தனது வீட்டின் முன் இருந்த காவல் நாயை சிறுத்தை தூக்கி சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுலோச்சனா கத்தி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது வனத்துறையினர் சம்பவ இடத்தில் சென்று பார்வையிட்டனர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை பார்வையிட்டனர்.
எங்கள் பகுதியில் இருக்கும் கல்குவாரியில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்து நாங்கள் வளர்த்து வரும் நாய் கோழி ஆடு மாடுகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை கொன்று குவித்துள்ளது சிறுத்தைக்கு பயந்தே மாலை 6 மணிக்கு பிறகு கிராம மக்கள் அந்த பகுதி வழியாக செல்வதில்லை மேலும் கால்நடை வளர்போரும் அச்சத்துடன் உள்ளனர்.
எனவே தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை வனத்துறையினர் இனியும் தாமதிக்காமல் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.