தமிழக செய்திகள்

கூலித்தொழிலாளியை கடித்துக் கொன்ற சிறுத்தை

வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

ஆசனூர் அருகே கூலித் தொழிலாளியை சிறுத்தை ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, கரடி மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இங்கு ஆசனூர் கடம்பூர் திம்பம் மலைப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன.

மலை கிராமங்கள்

அடர்ந்த வனப்பகுதியில் மலை கிராமங்கள் அமைந்துள்ளதால் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு செல்லும்போது அடர்ந்த வனப்பகுதியில் செல்ல வேண்டிய நிலைமை இருந்து வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

வனப்பகுதி

இந்த நிலையில் இங்கு வனப்பகுதியில் வசிக்கும் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கூண்டு வைத்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைகளை பிடித்து வருகின்றனர்.

ஆசனூர்

இந்நிலையில் ஆசனூர் அருகே கூலித் தொழிலாளியை சிறுத்தை ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

ஆசனூர் அருகே பங்களாதொட்டி என்ற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் கால்நடை வளர்ப்பது முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் பங்களா தொட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் வேலை விஷயமாக ஆசனூர் வந்து அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஆசனூருக்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள குறுக்கு வழியில் செல்வது வழக்கம்.

பெரியசாமி

இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (33) கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று இரவு பெரியசாமி கூலி வேலைக்கு சென்று விட்டு ஆசனூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு உணவை பார்சலில் வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சிறுத்தை

வனப்பகுதியில் இருந்து வெளியே சிறுத்தை முதலில் மறைந்திருந்தது. அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த பெரியசாமி மீது சிறுத்தை திடீரென பாய்ந்தது. இதனால் நிலைகுலைந்த பெரியசாமி கீழே விழுந்தார் அவரை சிறுத்தை புதருக்குள் இழுத்துச் சென்றது. இரவு முழுவதும் சிறுத்தை பெரியசாமி உடலை கடித்துக் குதறி சிதைத்துள்ளது.

இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் பெரியசாமி வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உறவினர்கள் பெரிய சாமியை பல்வேறு இடங்களில் தேடினர் .

பங்களா தொட்டி

இந்நிலையில் இன்று காலை பங்களா தொட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் பெரியசாமி உடல் சிதைந்து பாதி உடல் மட்டுமே இருந்தது. இதனைக் கண்டு கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை வைத்து சிறுத்தை தாக்கி பெரியசாமி இறந்ததை உறுதி செய்தனர். மேலும் இரவு முழுவதும் அவரது உடலை சிறுத்தை கடித்து குதறி தின்று இருப்பதும் தெரியவந்தது.

பிரேத பரிசோதனை

இதை அடுத்து பெரியசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது ஆவேசம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் ஆம்புலன்ஸ் முன்பு திரண்டு வந்து பெரியசாமி உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,

எங்கள் கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தை ஒன்று புகுந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதுகுறித்து நாங்கள் வனத்துறையினருக்கு புகார் அளித்திருந்தோம். அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பலமுறை வலியுறுத்தி இருந்தோம்.

ஆனால் வனத்துறையினர் எங்கள் கோரிக்கையை ஏற்காததால் தற்போது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை சிறுத்தை கடித்து மிகவும் கொடூரமாக கொண்டுள்ளது. இதுவரை கால்நடைகளை மட்டுமே வேட்டையாடி வந்த சிறுத்தை தற்போது மனிதர்களையும் தாக்கி கொன்று உள்ளது. மனிதர்களை தாக்கிய இரத்த வாடையை ருசி பட பார்த்த சிறுத்தை மீண்டும் மனிதர்களை தாக்க கூடும்.

எனவே உடனடியாக ஆட்கொல்லி சிறுத்தையை வனத்துறையினர் மாய்க்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும். ஆசனூர் மாவட்ட வன அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வர வேண்டும். இறந்த பெரியசாமி குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனர்.

கிராம மக்கள்

உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களிடம் போலீசார் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

உறவினர்கள் ஆசனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆசனூர் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அலட்சியமாக செயல்பட்டதால் சிறுத்தை கடித்து ஒருவர் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் வனத்துறையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

SCROLL FOR NEXT