தமிழக செய்திகள்

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கழிவறை கதவில் அதிக இடைவெளி- பெண் பயணிகள் அவதி

ரெயிலில் அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பெண் பயணிகள் கழிவறையை பயன்படுத்துவதில் கடும் சிரமத்தையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் எதிர்கொள்வதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை-திருச்செந்தூர் இடையே நெல்லை வழியாக இரு மார்க்கங்களிலும் தினந்தோறும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

ரெயிலில் அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அந்த ரெயிலில் ஏறிய பயணி ஒருவர் எஸ்-1 என்ற பெட்டியில் ஏறி அதில் இருந்த கழிவறை பகுதியை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.

பயணிகள்

அந்த வீடியோவில், ரெயிலின் கழிவறை கதவு மற்றும் அதன் அமைப்பில் போதிய மறைப்பு இல்லாத வகையில் இடைவெளி காணப்படுகிறது. இதனால் பயணிகள் கழிவறை செல்வதற்கு அசவுகரியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பெண் பயணிகள் கழிவறையை பயன்படுத்துவதில் கடும் சிரமத்தையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் எதிர்கொள்வதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரெயிலில் நீண்ட தூரம் பயணம்

ரெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் இயற்கை உபாதைகளுக்காக கழிவறையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், அதன் கதவில் இதுபோன்ற இடைவெளி இருப்பது பயணிகளின் தனியுரிமையை கேள்விக்குறியாக்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார்கள் கூறுகின்றனர்.

பொதுமக்கள்

பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றுக்கு ரெயில்வே நிர்வாகம் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், பயணிகளிடம் கட்டணம் வசூலித்து சேவை வழங்கும் ரெயில்வே நிர்வாகம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி களை முறையாக பராமரிக்காமல் இருப்பது ஏன் எனவும் பயணி கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என்று பயணிகளிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT