தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு சீரமைப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்-–ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரெயில் சேவைகள் 29-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 24-ந் தேதி மேட்டுப்பாளையம்-–குன்னூர் மலை ரெயில் பாதையில் சுமார் 40 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மலைச்சரிவுகளில் இருந்து ராட்சத பாறைகள், மண், சேறு மற்றும் மரங்கள் தண்டவாளங்களில் விழுந்ததால் ரெயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதால், அவற்றை சீரமைக்கும் பணிகள் சவாலாக அமைந்துள்ளன.
மலை ரெயில் பாதையில் ஹில்குரோவ் பகுதியில் சுமார் 70 அடி உயரத்திலிருந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
மேலும் கடந்த 25-ந்தேதி இதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் சீரமைப்பு பணிகளில் கூடுதல் சிரமம் ஏற்பட்டது.
குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து 75 ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு பாலாஸ்ட் ரெயில்கள் மூலம் மண் அகற்றும் எந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு, தண்டவாளங்களில் குவிந்துள்ள மண், பாறைகள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் மற்றும் பாறைகளை அகற்றிய பிறகு தண்டவாளங்களின் நிலை முழுமையாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
தேவையான இடங்களில் சேதமடைந்த தண்டவாளங்களை மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு ரெயில் பாதையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
சோதனை ஓட்டத்தின் முடிவுகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளின் அடிப்படையிலேயே மலை ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு சீரமைப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரெயில் சேவைகள் 29-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மலை ரெயில் பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளை முழுமையாக சீரமைத்து, பாதுகாப்பை உறுதி செய்த பிறகே ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.