கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்க மேலும் காலதாமதம் ஏற்படும் என தெரிகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
இந்த தொடர் மழை காரணமாக குன்னூர்-கரடி பள்ளம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு குழுவினர் ஒன்றிணைந்து கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சீரமைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை கன்னிமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் மின்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து மின்கம்பத்தை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
குன்னூர்-ஊட்டி சாலையில் பாலவாசி அருகே விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றினர். மேகமூட்டத்துடன் மழை தொடர்வதால் அப்பகுதிகளில் கடும் குளிர் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை மண்டல அலுவலர் ஸ்ரீதரா மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல கண்காணிப்பு பொறியாளர் விஸ்வநாதன், கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் மண்டல அலுவலர் ஸ்ரீதரா கூறுகையில், பர்லியாரிலிருந்து சாலையின் இரு பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனிடையே கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்க மேலும் காலதாமதம் ஏற்படும் என தெரிகிறது.