கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது ஆய்வக முடிவில் உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, 3 மாதங்களுக்கு விற்பனை மற்றும் புதிய கோழிகளை கொண்டு வருதல் தடை செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தியாகவல்லி, நொச்சிக்காடு, திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை, சித்திரைப்பேட்டை, ஆலப்பாக்கம், நடுத்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் கோழி பண்ணைகள் உள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொத்து, கொத்தாக இறந்து மடிந்தன. மொத்தம் 50 ஆயிரம் கோழிகள் இறந்தன. கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து கால்நடைத்துறை அதிகாரிகள், அந்தந்த பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து உயிரிழந்த கோழிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி ஆழமான குழிகளில் புதைக்கப்பட்டன.
மேலும் கோழி பண்ணைகளில் பார்வையாளர்களின் வருகையை கட்டுப்படுத்துதல், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல் மற்றும் கோழி பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோழி பண்ணை உரிமையாளர்களும் 3 மாதங்களுக்கு கோழிகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், புதிய கோழி குஞ்சுகளை பண்ணைகளுக்கு கொண்டு வரவோ, இருப்பு வைக்கவோ வேண்டாம் எனவும் கால்நடைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அங்கு இருந்த மேலும் 50 ஆயிரம் கோழிகளும் அழிக்கப்பட்டு, நிலையான செயல்பாட்டு முறைகளின்படி புதைக்கப்பட்டது. தொடர்ந்து இறந்த கோழிகளின் மாதிரிகளை கால்நடைத்துறையினர் சேகரித்து நாமக்கல் மற்றும் மத்திய பிரேதச மாநிலம் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் சில நாட்களுக்கு முன்பு கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கோழிகள் பராமரிக்கப்பட்டு வருவதையும், கோழிகளுக்கு ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பதையும் கோழி பண்ணை உரிமையாளர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் அங்குள்ள கோழிகளின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
இந்த நிலையில் ஆய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அதில், கடலூர் மாவட்டத்தில் இறந்த கோழிகள் அனைத்தும் பறவை காய்ச்சலுக்கு இறந்தது உறுதியாகி உள்ளது. மேலும் குள்ளஞ்சாவடியில் சேகரித்து அனுப்பப்பட்ட மாதிரிகளில் அந்த கோழிகளுக்கும் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.
இதுதொடர்பான தகவல் மத்திய பிரேதச மாநிலம் போபாலில் உள்ள ஆய்வகத்தின் சார்பில் கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவித்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து கால்நடை பராமரிப்புத்துறையினர் இன்று காலை குள்ளஞ்சாவடியில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்த 50 ஆயிரம் கோழிகளையும், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி கால்நடைத்துறையினர் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது உறுதியானதை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோழிபண்ணைகளிலும் ஆய்வு மேற்கொள்ள கால்நடைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்த பண்ணைகளில் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
பறவை காய்ச்சலால் கோழிகள் இறந்ததை அடுத்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோழிகள் பறவை காய்ச்சலால் தான் உயிரிழந்தது என்பது உறுதியான தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.