மத்திய மந்திரி எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசை அகற்ற தமிழக மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பதை கடந்த ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவு உறுதிப்படுத்தி உள்ளது. தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள கோபம், ஆதங்கம், வெறுப்பு ஆகியவை மே 4-ந் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும்.
தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி அமைவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும். இதற்கு முன்னதாக மகாராஷ்டிரா, அரியானா மாநில தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறாது என்று கருத்துக்கணிப்புகள் கூறியபோதிலும் இறுதியில் பா.ஜ.க.வே வெற்றி வாகை சூடியது.
இதேபோல தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை இல்லாத அளவுக்கும், மாநிலமே எதிர்பார்க்கும் அளவுக்கும் மிகப்பெரிய வெற்றியை பெறும். இன்னும் இரு தினங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவது உறுதி.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மின்மாற்றிகள் கொள்முதல் ஊழல் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழல்வாதிகள் எந்த அளவுக்கு அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. சட்டம் எப்போதும் தன் கடமையை சரியாகச் செய்யும். பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிச்சயம் அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.