சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் உள் பெரிய ஏரியில் 2 சிறுமிகள் ,2 சிறுவர்கள் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர்.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று சிறுவர்கள் தேவதர்ஷன், யுவனேஷ் ஆகிய 2 பேரும் அப்பகுதியில் விளையாடிக் கொண்டி ருந்தனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகள் பூஜா(13), குஷி(13) ஆகியோரும் சேர்ந்து விளையாடியுள்ளனர்.
மாலையில் வெகுநேரம் ஆகியும் 4 பேரும் வீட்டுக்கு வரவில்லை. பதற்றம் அடைந்த பெற்றோர் அவர்களை பல இடங்களில் தேடினர். எனினும் அவர்களை காணவில்லை.
இதை தொடர்ந்து கிருபா கரன், தயாளன் ஆகியோர் தங்கள் குழந்தைகளை காணவில்லை என்று குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று பகலில் குரோம்பேட்டையில் இருந்து சிறிது தொலைவில் உள்ள திருநீர்மலை பெரிய ஏரியில் 4 குழந்தைகள் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று 4 உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலமாக மிதந்தது காணாமல் போன தேவதர்ஷன், யுவனேஷ், பூஜ, குஷி என தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், பள்ளி விடுமுறை என்பதால் 4 பேரும் ஏரியில் குளிக்கச் சென்றதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொட ர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்கள் ஏரிக்கு சென்றது எப்படி, உயிரிழப்புக்கான முழுமையான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 பேரின் உடல்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவர்களது உடல்களைப் பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.