தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து 2 கல்லூரி மாணவர்கள் உடல் கருகி பலி

விபத்தில், திருப்பதி, திருச்செல்வன் ஆகிய இருவரும் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெங்களூரு-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி டோல்கேட் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் எஸ்.பட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் திருப்பதி (வயது 17), கார்த்திகேயன் மகன் திருச்செல்வன் (21). இவர்கள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூருக்கு சென்று விட்டு, பின்னர் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாரதி (வயது 24), அவருடைய சகோதரர் வேலு (18). இவர்கள், பழைய செல்போன்கள், பழைய பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் தாங்கள் வாங்கிய பொருட்களை பெங்களூருவில் விற்பனை செய்வதற்காக, இன்று அதிகாலை 4 மணியளவில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

காலை 6 மணியளவில், பெங்களூரு-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி டோல்கேட் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

2 மாணவர்கள் கருகி பலி

இந்த விபத்தில், திருப்பதி, திருச்செல்வன் ஆகிய இருவரும் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சாரதி, வேலு ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார்

விபத்து நடந்த இடத்தில் சாலை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட புதிய மற்றும் பழைய செல்போன்கள் சிதறிக் கிடந்தன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இரு வாகனங்களும் மோதியதில் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததா? அல்லது அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி விட்டு சென்றதா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT