சென்னையில் கோயம்பேடு அருகே தனியார் மதுபான பார் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 31-ந்தேதி இரவு, மது அருந்தி விட்டு நடனம் ஆடியபோது, இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு மோதலாக உருமாறியுள்ளது.
இதனால், அந்த இரு தரப்பினரும் பாரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில், இளம்பெண் யான்சி தரப்பினரும் மற்றும் பாலகுரு தரப்பினரும் வெளியேற்றப்பட்டனர். இரு தரப்பினரும் சாலையிலும் மோதி கொண்டனர். அப்போது, பாலகுருவின் கார் கண்ணாடியை யான்சி கல் வீசி தாக்கி விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த இளம்பெண் பாரை விட்டு வெளியேறி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை துரத்தி வந்த கும்பல் காரை கொண்டு பின்னால் மோதி உள்ளனர். அப்போது காரில் 7 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் இளம்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற 17 வயது சிறுமி படுகாயமடைந்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து ஏற்படுத்தி விட்டு காரில் வந்த கும்பல் தப்பி சென்று விட்டது.
இந்த விபத்து குறித்து போலீசாரு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் மரணமடைந்த அந்த இளம்பெண் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (வயது 18) என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பாலகுரு, கல்லூரி மாணவர் கிஷோர் குமார், சுமன், ஜோஸ்வா உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
யான்சியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் நட்சத்திர விடுதி மதுபான பாருக்கு 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.